ஸ்லோவேனியாவின் மிக உயரமான டிரிக்லாவ் மலையில் எஞ்சியுள்ள பனிப்பாறைத் துண்டுகள் அடுத்த சில நாட்களில் முற்றிலும் கரைந்துவிடக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம், குறைந்த பனிப்பொழிவு மற்றும் கோடை வெப்பம் காரணமாக, நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கிய இந்தப் பனிப்பாறை மறையும் நிலையை எட்டியுள்ளது.
ஒருகாலத்தில் கோடை கால பனிச்சறுக்கு விளையாட்டுக்காக பலரை ஈர்த்த டிரிக்லாவ் பனிப்பாறை, தற்போது சில சிறிய பனித் திட்டுகளாக மட்டுமே எஞ்சியுள்ளது. பல தலைமுறைகளாக ஸ்லோவேனிய மக்களால் போற்றப்பட்ட இந்தப் பனிப்பாறையை விஞ்ஞானிகள் 1946 முதல் கண்காணித்து வருகின்றனர். அப்போது அது சுமார் 14 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது.கடந்த சில ஆண்டுகளாக புதிய பனியின் ஓட்டம் இல்லாததால், இது செயல்படும் பனிப்பாறை என்ற நிலையை ஏற்கெனவே இழந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது எஞ்சியுள்ள பழைய பனியும் விரைவாகக் கரைந்து வருகிறது.
ஸ்லோவேனிய அறிவியல் மற்றும் கலை அகாடமியின் ஆராய்ச்சி மையத்தில் உள்ள அன்டன் மெலிக் புவியியல் நிறுவனத்தைச் சேர்ந்த மிஹா பாவ்ஷெக் கூறும்போது, “கடைசியாக எஞ்சியுள்ள பனியும் வரும் சில நாட்களில் மறைந்துவிடும் என்பதையே அனைத்தும் காட்டுகின்றன” என்றார்.
“நான் இதை 30 ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறேன். டிரிக்லாவ் பனிப்பாறையைப் பொறுத்தவரை, இந்தக் கண்காணிப்புப் பணி இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த குளிர்காலத்தில் வழக்கத்தைவிடக் குறைவாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது. அந்தப் பனியும் வழக்கத்தைவிட முன்னதாகவே உருகியதால், எஞ்சிய பனி நீண்ட காலம் கோடை வெப்பத்தின் பிடியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நிழலும், பாதுகாப்பும் உள்ள இடம்கூட அதன் அழிவைத் தடுக்க முடியவில்லை என்று பாவ்ஷெக் குறிப்பிட்டார்.
உலகின் மற்ற கண்டங்களைவிட வேகமாக வெப்பமடைந்து வரும் ஐரோப்பா முழுவதும் பனிப்பாறைகள் சுருங்குகின்றன. அண்டை நாடான ஆஸ்திரியாவில் பனிப்பாறைகள் மறைவது, எதிர்காலத்தில் ஸ்லோவேனியாவின் பாசனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, டிராவா மற்றும் முரா ஆற்றுப் படுகைகளில் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளதாக பாவ்ஷெக் தெரிவித்தார். இதனால் டிராவா, ப்டுய் விவசாயப் பகுதிகளும் முரா பிராந்தியத்தின் சில பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும்.